புனித இஞ்ஞாசியார்

ஆண்டவரே உம்மை மட்டும் அவர்கள் அறிந்திருந்தால்...!
புனித இஞ்ஞாசியார் (1491- 1556)

பிறப்பே சிறப்பு:

புனித இஞ்ஞாசியார் 1491 -இல் ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த பெல்டரனுக்கும் மரினா செய்ன்சுக்கும் கடைக்குட்டியாக இலொயோலா கோட்டையில் பிறந்தார். இயேசுவின் பெயர் கொண்ட சபைபை நிறுவ இருப்பவரைப் பெற்றெடுக்கப்போவதை உணர்ந்தவரைப் போல தமது இறைபக்தியின் காரணமாக உயர்குடிமகனைக் குதிரைக் கொட்டிலில் அவர் தாய் ஈன்றெடுத்தார். ஓஞ்ஞாவிலுள்ள ஆசீர்வாதப்பர் சபையைச் சார்ந்த துறவி புனித எனிக்குசின் பெயரே இனிகோ ஓஞ்ஞா லோபஸ் தே இலொயோலா என அவருக்கு வழங்கப்பட்டது. பிறந்த ஒரு சில மாதங்களிலே தனது தாயை இழந்த பாலனுக்கு அவ்வூரைச் சார்ந்த கொல்லர் ஒருவரின் மனைவியே செவிலித் தாயாகி பாலூட்டினார்.

உடைத்து ஆட்கொண்டார்:

வலிமையான வீரராகத் தமது அரசருக்குப் பணிபுரிய விழைந்து பதினேழு வயதில் இராணுவத்தில் இணைந்தார். தமது 30-ஆம் அகவையில் பாம்பலோனா கோட்டையைப் பாதுகாக்கும் பணியில் துணிந்து போராடிய மாவீரனின் வலது காலை ஒரு பீரங்கிக் குண்டு பதம்பார்க்க மண்ணில் சாய்ந்தார். நேர்த்தியான வீரராகத் திகழ வேண்டும் என்பதற்காக மயக்க மருந்து இல்லாத தருணத்திலும் இரண்டு அறுவை சிகிச்சைகளைத் தனது உடலழகுக்காக ஏற்றுக்கொண்டார். காயத்தின் காரணமாக சாவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டார். அற்புத விதமாகப் புனிதர்கள் இராயப்பர் சின்னப்பர் திருவிழாவின் போது நலமடையத் துவங்கினார்.
ஓய்வில் இருந்த போது இஞ்ஞாசியாருக்குக் காயத்தைவிடத் தனிமையே மிகுந்த வேதனையைத் தந்தது. பொழுதைக் கழிக்க வீரம் செறிந்த காதல் கதைகளை விரும்பிய அவருக்கு இயேசுவின் வாழ்வு மற்றும் புனிதர்களின் வரலாறு என்ற புத்தகங்கள் மட்டுமே கிடைத்தன. விரும்பமில்லாமல் படித்தபோதிலும் அப்புனிதர்களைப் போலத் தாமும் தமது வாழ்வை ஏன் அமைத்துக்கொள்ளக் கூடாது எனச் சிந்திக்கலானார்.

ஆண்டவனே ஆசானாய்:

தமது பழைய வாழ்வைக் களைந்து புனிதர்கள் வழியில் நடைபோட முனைந்தார். ஒறுத்தலினால் தமது உடலை வருத்திச் செபிக்கத் தொடங்கினார். அன்னை மரியும் குழந்தை இயேசுவும் தமது அறை தேடி வந்த அவ்விரவே மனமாறினார். கடவுளே தமது வாழ்வின் மையம் என்பதை உணர்ந்தார். எருசலேம் சென்று இயேசு கால் பதித்த நிலத்தை முத்தமிட வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராய்ப் பயணத்தைத் துவங்கினார். வழியில் கார்டோனர் ஆற்றங்கரையோரம் அமைந்திருந்த மன்ரேசா என்ற இடத்தில் ஒரு குகையில் பதினொரு மாதங்கள் செபத்திலும் தவத்திலும் கடவுளால் வழிநடத்தப்பட்டார். அனுதினமும் ஏழு மணி நேரம் இறைவார்த்தையைத் தியானிப்பதில் செலவிட்டார்.
தமது உள்ளொளிகளைச் சிறு குறிப்புகளாக எழுதினார். இயேசுவின் வார்த்தைகளைச் சிகப்பு மையிலும் அன்னை மரியாவின் வார்த்தைகளை நீல மையிலும் பதித்தார். இதுவே பிற்காலத்தில் விவிலியத்திற்கு அடுத்தபடியாக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூலான ‘ஆன்மிகப் பயிற்சிகளாக’ உருப்பெற்றது. இடையிடையே உலக அரசருக்குப் பணிப்புரிய வேண்டும் என்ற ஆசை எழுந்தது. கடவுளின் உந்துதல் எது சாத்தானின் சோதனை எது என்பதை ஆய்ந்தறியவும் இறைச்சித்தத்தைத் தெளிந்து தேர்வு செய்யவும் இவ்வனுபவமே அவருக்கு பேருதவியாக இருந்தது. ஒர் ஆசிரியரைப் போலக் கடவுள் தமக்குக் கற்பிப்பதை உணர்ந்தார். இறைவனின் அதிமிக மகிமைக்கே உழைக்க உறுதிபூண்டார்.

திருப்பயணியின் திருப்பயணம்:

எருசலேம் சென்று அங்கிருக்கும் இஸ்லாமியர்களை மனமாற்ற வேண்டும் என்ற வேட்கை கொண்டிருந்தார். ஆனால் அங்கு நிலவிய அரசியல் பிரச்சனையின் காரணமாக வெகு நாள்கள் அவரால் அங்குத் தங்க இயலவில்லை. குருத்துவப் படிப்பிற்காகப் பார்சிலோனா சென்றார். தமது 33 -ஆம் வயதில் சிறுவர்களுடன் அமர்ந்து இலத்தின் பயின்றார். படிக்கும் காலத்திலே தனது தேவைக்காகக் பிச்சையெடுத்தார். மக்களுக்கு மறைக்கல்வியைக் கற்பித்து அவர்களது ஆன்மிக வாழ்வை வளம் பெறச் செய்தார். மாலை வேளைகளில் மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளுக்குப் பணிவிடை புரிந்தார். ‘இறையியல் பயிலாத அவர் எவ்வாறு போதிக்கலாம்’ என்ற கேள்விக்குட்படுத்தப்பட்டு ஒன்றரை மாதம் சிறையிலடைக்கப்பட்டார்.
பின்னர் பார்சலோனா அல்கலா சலமான்க்கா மற்றும் பாரிஸ் பல்கலைகழகத்தில்; தத்துவயியல் மற்றும் இறையியல் பயின்றார் ஏறக்குறைய பதினொரு ஆண்டுகள் படிப்பிற்காகச் செலவிட்டார். ஒரு வேளை தமது அனுபவத்தின் பயனாகத்தான் இயேசு சபையில் துறவறப் பயிற்சி காலத்தை நீண்டதாக வடித்தார் போலும்! இந்த நெடிய பயிற்சிச் காலத்தில் கடவுளின் உடனிருப்பையும் தொடர்பராமரிப்பையும் பெரிதும் உணர்ந்தார்.

முத்தான முதல் சொத்துக்கள்:

பாரிசில்; தம்முடன் தங்கிய ஃபேபர் மற்றும் சவேரியாரின் உள்ளங்களைத் தமது வாழ்வாலும் வார்த்தையாலும் கொள்ளைகொண்டார். ‘ஆண்டவரே உம்மை மட்டும் அவர்கள் அறிந்திருந்தால்!’ என்ற தொடரே இவரது தாரகமந்திரமாக இருந்தது. ஆன்மிகப் பயிற்சிகளால் அவர்களைப் போன்று மேலும் பலரைத் தம் அணியில் சேர்த்தார். ஆன்மாக்களை மீட்டெக்கும் பணியைத் தமது சக தோழர்களுக்குத்; தெரியப்படுத்தினார். இஞ்ஞாசியாரின் தோழர்களை இனிகியுஸ்ட் (ஐnபைரளைவள) என்று அழைத்தனர். இயேசுவின் பெயரை அதிகப்படியாகப் பயன்படுத்தியதன் காரணமாக இயேசுவினர் (துநளரவைள) என்று பிறரால் பழிக்கப்பட்டனர். அந்தப் பழிப்புரையே பிற்காலத்தில் புகழுரையாக மாறியது.
1534 -ஆம் ஆண்டு ஆறு தோழர்களுடன் விண்ணேற்பு அன்னையின் திருநாளன்று ஏழ்மை மற்றும் கற்பு என்ற வார்த்தைபாட்டினை மோன்மார்த்திலுள்ள புனித டென்னிஸ் ஆலயத்தில் வழங்கினார். இந்தக் குழுவே இயேசு சபை என்ற துறவற சபைக்கு வித்திட்டது. எருசலேமில் நிலவிய அரசியல் மற்றும் சமயக் குழப்பத்தினால் அங்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட்டனர்.
இவர்களே 1537 -இல் வெனிஸ் நகரில் குருக்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டனர். குருத்துவ அருள்பொழிவுக்குப் பின்னர் நாற்பது நாள்கள் தங்களையே தயாரித்த பின்னரே தங்களது முதல் திருப்பலியை நிறைவேற்றினர். ஆண்டவர் பிறந்த ஊரில் திருப்பலி நிறைவேற்றப் பேராவல் கொண்ட இஞ்ஞாசியார் தகுந்த அரசியல் சூழல் அமையாததன் காரணமாக ஒன்றரை வருடம் கழித்து உரோமையில் இயேசு பிறந்த குடிலின் ஒரு பகுதியைக் கொண்ட மேரி மேஜர் திருத்தலத்தில் தனது முதல் திருப்பலியை நிறைவேற்றினார். ஒவ்வொரு திருப்பலியிலும்; கண்ணீர் மல்கிடும் அருளைப் பெற்றிருந்தார். தமது தனி செபத்தின் போது தரையிலிருந்து ஆறடி வரை மேலே எழுப்பப்பட்டார். இறைவனோடு உறவாடுகையில் அவர் முகம் இறையருளால் மிளிர்ந்தது.


இயேசுவின் பெயரில் ஒரு சபை:

திருத்தந்தை மூன்றாம் பவுலிடம் தங்களையே வழங்க உரோமை நகருக்குச் செல்லும் வழியில் லா ஸ்தோர்தா என்ற சிற்றாலயத்தில் மூவொரு இறைவன் இஞ்ஞாசியாருக்குக் காட்சியளித்தார். ‘உரோமையில் நாங்கள் உங்களுக்கு ஆறுதலாக இருப்போம்’ என்றுரைத்தார். இவ்வார்த்தை இறைத்திட்டத்தையும் கடவுளின் உடனிருப்பையும் உறுதிசெய்தது. 1540 -இல் இயேசு சபை என்ற துறவற அமைப்புக்குத் திருத்தந்தை அனுமதியளித்தார். சபையின் ஒழுங்குகளையும் நோக்கத்தையும் படித்த அவர் ‘கடவுளின் அருள்கரம் இங்கிருக்கிறது’ என்றார்.
இயேசு சபையின் முதல் சபைத்தலைவராக இஞ்ஞாசியார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1541 -ஆம் ஆண்டு ஏப்ரல் 22 -ஆம் நாள் இஞ்ஞாசியாரும் அவரது தோழர்களும் இயேசு சபையில் தங்களது ஏழ்மை கற்பு கீழ்ப்படிதல் என்ற வார்த்தைப்பாட்டினை மனமுவந்து கொடுத்தனர். இஞ்ஞாசியாரே அன்றைய திருப்பலி நிறைவேற்றினார்.

திருச்சபையின் சம்மட்டி:

ஐரோப்பாவில் லூத்தர் கால்வின் போன்றோர் திருச்சபையை சீர்த்திருத்தும் நோக்கில் அதனைச் சீர்குலைத்துக்கொண்டிருந்த வேளையில் இஞ்ஞாசியாரும் அவர் தோழர்களும் திருச்சபைபையும் அதன் பாரம்பரியத்தையும் கட்டிக்காத்தனர். திருத்தந்தையின் வேண்டுகோளுக்கிணங்க நற்செய்தியை அறிவிக்கப் பல நாடுகளுக்கு துணிந்து பயணம் மேற்கொண்டனர்.
தான் பெற்ற இராணுவப் பயிற்சியின் விளைவாக சபையின் ஒழுங்கைக் கடுமையானதாக அமைத்திருந்தார். ஆயினும் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை பெருகியதே அன்றி குறையவில்லை. இஞ்ஞாசியாரின் காலத்திலேயே 1000 உறுப்பினர்களையும் 35 கல்வி நிறுவனங்களையும் இயேசு சபை கொண்டிருந்தது. அன்று இருந்த துறவற சபைகளுள் தனிச்சிறப்பு மிக்க தாண்மையை இயேசு சபை கொண்டிருந்தது. நான்கு சுவருக்குள் முடங்கிக்கிடக்காமல் கடவுளை மக்களுக்கு எடுத்துச்செல்லும் சாதனமாகவும் திருச்சபையின் ஊடகமாகவும் விளங்கிற்று. இயேசு சபையின் இப்படிப்பட்ட பணியின் காரணமாக குழும செபம் குழுமச் சீருடை போன்ற ஒழுங்குகளிலிருந்து விலக்குத் தரப்பட்டது.
கல்வித்துறையில் இயேசு சபையினர் சிறப்பாகப் பணியாற்றினர். இஞ்ஞாசியார் வடிவமைத்த கல்வி முறையை இன்றும் உலகம் போற்றுகின்றது. இஞ்ஞாசியார் எழுதிய 6814 கடிதங்கள் நமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. அவர் எழுதிய இயேசு சபையின் சாசனங்கள் பல நாடுகளின் சாசனத்திற்கு முன்னுதாரணமாய் இருந்துள்ளது.

இறையாட்சியின் நிறைசாட்சியாய்:

தான் இறைவனடி சேரும் நாள் அருகாமையில் இருப்பதை உணர்ந்தவராய் திருத்தந்தையின் ஆசீர்வாதத்தை வேண்டி நின்றார். அய்யோ தாமதம் அதனைப் பெற்று வருவதற்கு முன்னரே அவர் இன்னுயிர் இறைவனுடன் ஒன்றறக்கலந்தது. 1556 -ஆம் ஆண்டு ஜுலைத் திங்கள் 31 -ஆம் நாள் இஞ்ஞாசியார் இறைவனடி சேர்ந்தார். 1622-ஆம் ஆண்டு மார்ச் 12 -ஆம் தேதி தமது ஆருயிர்த் தோழர் சவேரியாருடன் திருத்தந்தை கிரகோரி என்பவரால் புனிதர் பட்டியலில் இணைக்கப்பட்டார்.

புனிதரின் ஒரு சில புதுமைகள்:

  • வான்நோக்கி செபித்து வலிப்பினால் பாதிக்கப்பட்ட மனிதர் ஒருவரைக் குணப்படுத்தினார்.
  • இஞ்ஞாசியாரது துணியைத் துவைக்கும்போது கை சூம்பிய பெண் ஒருவர் நலமடைந்தார்.
  • அவர் தோழர் சைமன் சாகும் தருவாயில் இருந்த போது இஞ்ஞாசியார் அவரைக் கட்டித்தழுவியவுடன் உடல் நலம் தேறினார்.
  • திருப்பலி நிறைவேற்றும் பொழுது அவரது தலைக்குமேல் எரியும் தணலைப் பலர் கண்டனர்.
  • தமது தனி செபத்தின் போது தரையிலிருந்து ஆறடி வரை மேலே எழுப்பப்பட்டார்.
  • ஆனமாக்களை ஊடுருவி அறியும் வரத்தையும் அன்னை மரியாவின் துணைக் கொண்டு நடக்கவிருப்பதை முன்னறிவிக்கும் வரத்தையும் பெற்றிருந்தார
  • அவர் இறந்தப் பிறகு எலும்புருக்கி நோயினால் அவதியுற்ற ஒரு சிறுமி அவரது மேலாடையை தொட்டு நலமடைந்தார்.


இன்று 53 புனிதர்கள் மற்றும் 146 அருளாளர்களின் சாட்சிய வாழ்வாலும் 16090 உறுப்பினர்களின் ஓய்வைத் தேடா உழைப்பாலும் திருச்சபைக்குச் சீரிய பணியை இயேசுவினர் ஆற்றி வருகின்றனர்.

‘உமது அன்பும் அருளும் மட்டுமே எனக்குப் போதும்’ என்ற தாராள மனத்துடன் நம் வாழ்வையே இறைவனுக்கு வழங்கிட இஞ்ஞாசியாரைப் போல இயேசுவின் வழியில் துணிந்து இறைப்பணியாற்றிட இளைய உள்ளங்களே உங்களை அழைக்கின்றோம்.

வாருங்கள் அன்பால் இவ்வுலகை வெல்லுவோம்.